வாழ்தலின் பொருட்டு - 02

இத்தனை வயதிற்குப் பின்பும் சொற்களைக் குறித்த அச்சமின்மையென்பது வெட்கத்திற்குரியதே! எரிந்த சொல்லமிலத்தின் வெப்பச்சூட்டை சகித்துக் கொண்டு பேரன்பின் ப்ரியங்களை அள்ளித்தர புத்தனுக்கும் இயலாதுதான்!

எத்தனை முறைதான் உடன்கட்டை ஏற்றுவேன்.! இமையினும் மேலாய்க் காக்கும் இதயத்தின் உணர்வு நரம்புகளை உருவிக் கொண்டபின் மீட்டிய இசையில் இன்பமில்லை என்னும் என் அதிமேதாவித்தனத்துக்கேனும் பரிசளிக்கப்பட்டிருக்கலாம் இந்த தகிக்கும் கோடை!

நாசித்துவாரம் வழி வெளியேறும் காற்று மட்டும் தான் இருப்பினை இக்கணம் வரை மெய்யென பறைசாற்றுகிறது... நான் எடுத்து வீசிய க(சொ)ற்கள் என்னை நோக்கி திரும்பாது என்பதுதான் அதீத காயம் தருகிறது...!

எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு ஒரு அன்பின் தீண்டல் அவசரமாய் அவசியமாகிறது...! ஒத்திப் போடலாம் வழக்கை, ஒரு கோப்பை தேநீரை பகிர்ந்து கொள்ள வா நிகழ்காலமே!கடிகாரத்தை நிறுத்திவைத்துவிட்டால் என்ன? நகர்ந்து நகர்ந்து நாட்களை மட்டும் நீட்டிக் கொண்டே போகிறது...!

வேண்டுமானால் வா விரல்களைக் கோர்த்துக் கொண்டு புதிதாய் பூத்த மஞ்சள் நிறத்து செம்பருத்திப் பூவையும், அதன் இன்னொரு கிளையில் எப்போதாவது பூக்கும் சிவப்பு நிற செம்பருத்திப்பூவைக் குறித்தும் சில கதைகள் என்னிடத்தில் இருக்கிறது...! உனக்கு அதைச் சொல்வதில் எனக்கும் பிடித்தம் தான். !

கதைசொல்லும் வேகத்தில் நீ காதோரம் தீண்டுவதையும், என் கார்குழல் பிரித்து வருடி சிக்கல் உண்டாக்குவதையும் நான் கண்டு கொள்ளவில்லை என்பது போல் காட்டிக் கொள்ளவே சப்போட்டா மரத்தையும் அதன் கனியின் சுவை குறித்தும் பேசத் துவங்கியிருப்பேன்!!

கொஞ்சம் முன்னேறி ஆடைக்குள் பிரவேசிக்கும் போது வழக்கம் போலவே அச்சம் துவங்கிவிடும் எனக்கு. உன்னைப் புறந்தள்ளி வாயிலின் கதவடைத்து விட்டு யன்னலைத் திறக்கையில் நீ கண்டுபிடித்திருப்பாய் என் ஊடல் பொய்தானென...!

வேறென்ன நீ தழுவிக் கொள்ளும் சுகத்தை தக்கவைத்துக் கொள்ள என் வசம் இருந்திருக்கும் உனக்கும் சேர்த்து ஒற்றைத் தேநீர்க் கோப்பை!!

வருடித், தழுவி நீ ரீங்காரமிட்டு விழித்திருக்கையில் நான் போர்த்தியபடி உறக்கத்தில் கிடப்பேன்!!

சோர்வற்றுக் காத்திரு,
காதலைக் கொண்டாடிக் களிக்க அடுத்தடுத்த சில நாட்களும் கூட நம் வசம் இருக்கலாம் !

கார்காலப்பனிக்காற்றே!!


முகில் நிலா அவர்களின் தொடர் பேஸ்புக் பதிவுகளுக்கு நன்றி!

#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE 

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து