தற்கொலை குறிப்புகள் | கார்ட்டூனிஸ்ட் பாலா | LINES MEDIA.IN

சில விசயங்கள் அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகன்றுவிடாது... அதேபோல் சில விசயங்கள் ஏன் நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.

கந்து வட்டி கொடுமைக்கு அப்பா அம்மாவுடன் நின்று எரிந்த அந்த குழந்தையின் உருவம் இன்னும் மனதை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

அந்த குழந்தையின் மரணத்தையொட்டி எழுத நினைத்த இந்த பதிவு தற்கொலைகள் குறித்தானதுதான் என்றாலும் நான் நெருக்கமாக பார்த்த முதல் மரணத்திலிருந்து இதை தொடங்க விரும்புகிறேன். இதய பலகீனமானவர்கள் இதை படிக்காமல் கடந்து சென்றுவிடுமாறு வேண்டுகிறேன்.

அப்போது எனக்கு 8 வயது இருக்கும். மும்பையில் நாங்கள் குடியிருந்த வீட்டருகே ஒரு பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அக்கம் பக்கத்து குழந்தைகள் எல்லாம் அங்கு விளையாடுவது வழக்கம். அன்றும் அப்படிதான் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென குழந்தைகள் எல்லோரும் பேரூந்து விளையாடுவது என்று முடிவு செய்தோம். நான் நடத்துனராக மாறினேன். மற்ற குழந்தைகள் பயணிகளாகி ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று கொண்டார்கள். “நான் தான் டிரைவர்” என்று கூவியபடி கடைசியாகத்தான் அவன் ஓடி வந்தான்.

ராஜா என்பது அவன் பெயர். அந்த குழந்தைகள் பட்டாளத்தில் அவன் தான் குட்டி. 5 வயது இருக்கும். துறுதுறுவென அழகாக இருப்பான். வீட்டில் அவனை `கன்னுக்குட்டி’ என்றுதான் அழைப்பார்கள். அப்போதுதான் சாப்பிட்ட கையை கழுவிவிட்டு டவுசரின் பின் பக்கம் துடைத்தபடி வந்திருந்தான்.

டிரைவர் என்பதால் முன் வரிசையில் போய் நின்று கொண்டவன் என்ன நினைத்தானோ... பஸ் கிளம்ப வேண்டும் என்றால் சுவிட்ச் ஆன் பண்ண வேண்டும் என்றபடி எங்களிடமிருந்து விலகி இரண்டடி நடந்து சென்று சுவர் ஓரத்தில் சும்மா தொங்கி கொண்டிருந்த மின் இணைப்பு பெட்டியில் இருந்த சுவிட்ச்சில் கை வைத்தான்.

அவ்வளவுதான்..

என் வாழ்வின் முதல் மரணத்தை அப்போதுதான் பார்த்தேன்..

சாப்பிட்டு ஓடி வந்தவன் கழுவிய ஈரமான கை சரியாக துடைக்காமல் இருந்ததால் மின்சாரம் தாக்கியது. சுவிட்ச்சில் கை வைத்தபடியே தொங்கி கொண்டிருந்தவன் இறுதியாக உச்சரித்தது.. ஆ.. ஆ… அம்மா.. என்ற ஈனஸ்வரத்திலிருந்து வெளிப்பட்ட முனங்கல் சத்தம் மட்டுமே.

இந்த இடத்தில் அந்த நம்ப முடியாத விசயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இந்த சம்பவத்திற்கு மிக சரியாக ஒரு வாரத்திற்கு முன் தான், என் வகுப்பாசிரியர், மின்சாரம் தாக்கினால் என்ன செய்ய வேண்டும், தீ பிடித்ததும் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு பாடம் நடத்தியிருந்தார்.

அந்த ஆசிரியர் நடத்திய பாடம் தான் அன்று அந்த அறையில் இருந்த நான் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை காப்பாற்றியது. மற்ற குழந்தைகளை தொடவிடாமல் தடுத்துவிட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்களை ஓடிச்சென்று கூட்டிட்டு வந்தபோது எல்லாம் முடிந்திருந்தது.

ராஜாவின் அம்மா வந்து.. “இப்போ தான சாப்பிட்டு போனீயே என் கன்னுக்குட்டி.. இப்படி கிடக்கியே..." என்று மார்பில் அடித்து அழுதார். முதல் மரணமும் மரணத்திற்கான அழுகையையும் அப்போதுதான் பார்த்தேன். மனதில் பதிந்தே போய்விட்டது.

12வது வயதில் தான் முதல் தற்கொலையை பார்த்தேன். பக்கத்துவீட்டு நண்பன். என்னைவிட இரண்டு வயது பெரியவன். வீட்டில் இருந்த 5 ரூபாய் காணவில்லை என்று அவன் அம்மா சந்தேகப்பட்டுவிட்ட ரோசத்தில் உடலில் மண்ணெண்னை ஊற்றி எரிந்தவன் அலறியபடியே வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்ததை நேருக்கு நேராக பார்த்தேன்.

அப்பாவும் நண்பர்களும் சேர்ந்து போர்வையை போட்டு தீயை அணைத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பிணமாகத்தான் வீடு வந்தான். வெறும் ஐந்து ரூபாய் ஒருவனின் வாழ்வை முடித்துவிட்டது.

ஒரு நாள் நண்பர்களுடன் இரவு மட்டுங்கா ரயில் நிலையம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது கையில் சிறு பெட்டியுடன் தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்ற நடுத்தர வயது இளைஞர் ஒருவர் என் கண் முன் எதிரில் வந்த ரயிலில் தலையை வைத்தார். பதறியபடி ஓடிச்சென்று பார்த்தபோது தலை மட்டும் அப்படியே தனியாக இரண்டு தண்டவாளத்திற்கும் நடுவில் நேராக எங்களை பார்த்தபடி கிடந்தது.

ஊனமுற்ற ஊர்காரர் ஒருவர், உறவுகளுக்கு பாரமாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு தூக்கில் தொங்கினார். கயிற்றில் தொங்கிய காலை பிடித்து தூக்கி சித்தப்பா ஒருவர் அந்த உடலை இறக்கியதை பார்த்துவிட்டு பல நாள் இரவில் தூக்கம் தொலைத்தேன்.

12ம் வகுப்பில் உடன் படித்த மாணவன் ஒருவர், லாட்ஜில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் தங்கிய தகவல் வீட்டினருக்கு தெரிந்த அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் சிறுவயது மகனுடன் தனித்து விடப்பட்ட ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், “சார் தற்கொலை செய்யக்கூடாதுனு விழிப்புணர்வு பதிவு எழுதுங்க சார்..” என்று பேசும்போதெல்லாம் வேண்டுவார். அம்மா இல்லாமல் வளரும் அவரது மகனின் முகம் பார்க்கும்போதெல்லாம் வேதனையை கொடுக்கும்.

ஒருமுறை கீழ்பாக்கம் தீக்காயப்பிரிவு மருத்துவர் நிர்மலா அவர்களை பேட்டி எடுக்க சென்றபோது என்னால் அங்கு நிற்கவே முடியவில்லை. அவ்வளவு மரண வேதனை ஒலிகள்.

இப்படி தனிப்பட்ட தவறுகளால் நடந்த தற்கொலை மரணங்களுக்கு மத்தியில் ஈழத்துக்காக தீக்குளித்த முத்துகுமாரும், மூவர் உயிர் காக்க செங்கொடியும், காவிரிக்காக விக்னேசும்.. ரோஹித் வெமுலாவும் அனிதாவும்.. இப்போது கந்துவட்டி குழந்தைகளும் என்று தற்கொலை மரணங்கள் உண்டு பண்ணிய வேதனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது..

அரசியலோ தனிப்பட்ட உளைச்சலோ தற்கொலை எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல...

இந்த பூமியில் இந்த நொடி உயிருடன் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் சாதாரணமானவர்கள் அல்ல...

எவ்வளவு பரிணாம வளர்ச்சிகள்.. இயற்கை சீற்றங்கள்.. மிருகங்கள்.. நோய்கள்.. சக மனிதர்கள் நடத்திய போர்கள்.. விதவிதமான ஆயுதங்கள்.. வாகன விபத்துகள் என்று எவ்வளவு அபாயங்களை கடந்து தலைமுறை தலைமுறையாக நம் ஜீன்கள் எப்படி கடத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை நினைத்துப் பார்த்தால் தற்கொலை எவ்வளவு கோழைத்தனம் என்பதை உணர முடியும்.

அதனாலயே இந்த உண்ணாவிரதம் இருப்பது மாதிரியான போராட்டங்களை எப்போதும் ஆதரிப்பது இல்லை. அந்த போராட்டத்திற்கு வெள்ளையர்களிடமிருந்த மரியாதை இந்திய ஜனநாயக மன்னர்களிடம் கிடையாது என்பது ஒரு காரணம் என்றால்.. என்னால் ஒரு நேரம் வயிறு பசியைக் கூட தாங்க முடியாது என்பது மற்றொரு காரணம்.

ஆகவே இந்த கணம் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரும் சாதாரணமானவர்கள் அல்ல. நிற்க இடமில்லாமல் ஓடும் ரோஹிங்யா, சிரியா, பாலஸ்தீன குழந்தைகள்.. என ஒவ்வொரு உயிரும் வாழ்வதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்..

ஏன்.. வாழ்தல் என்பது அத்தனை முக்கியம். போர்களற்ற மூன்று வேளை உணவும் இருக்க இடமும் கிடைக்கப்பெற்றவர்கள் அனைவருமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

கணவன் மனைவி பிரிவு.. சண்டை.. பெற்றோர் திட்டியதால்.. பரிட்சையில் தோற்றதால் என்றெல்லாம் அற்ப காரணங்களுக்காக நம்மை மாய்த்துவிடக்கூடாது.

ஏனெனில் இந்த பிரபஞ்சம் நம்மை இங்கு வாழ்வதற்குத்தான் அழைத்திருக்கிறதே தவிர தற்கொலை செய்வதற்காக அல்ல..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா

லைன்ஸ் மீடியா

இப்பதிவு லைன்ஸ் மீடியா என்னும் கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களின் இணையத்தளத்திருந்து எடுக்கப்பட்டு சமூக விழிப்புணர்வு கருதி 'சிகரம்' மீள் பிரசுரம் செய்கிறது.Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து