வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம், வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. ஆனால் நாம் வாழ்க்கையை வாழ்கிறோமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். நான் தினமும் காலையில் எழுகிறேன்; வேலைக்குச் செல்கிறேன்; இரவு நன்றாக உறங்குகிறேன், ஆகவே நான் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுவெல்லாம் வாழ்க்கை அல்ல. உங்களுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்கள் கட்டுப்படுத்த முடிந்தால் அது தான் வாழ்க்கை. காலை எட்டு மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. அதற்காக தயாராவதோ, பணிக்குச் செல்வதோ வாழ்க்கை அல்ல. அது இன்னொருவர் உங்கள் நிமிடத்தை தீர்மானிக்கிறார். உங்களுக்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க விரும்பினாலும் உங்களால் முடியாது. தினமும் வேலைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை மாற்ற முடியாதா? முடியும்!
இதுவெல்லாம் வாழ்க்கை இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கையை வாழ்வதுதான் எப்படி? இப்படித்தான். உங்களுக்கு எது விருப்பமோ அதைப் படியுங்கள், உங்களுக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அந்த வேலையையே செய்யுங்கள். இப்படியாக ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களுடையதாக்குங்கள். இதற்கு முறையான திட்டமிடல் அவசியம். உங்களுடைய எதிர்காலம் எது என்பதைத் தீர்மானியுங்கள். அதற்கான பாதையைத் திட்டமிடுங்கள். பிறகு பயணத்தை ஆரம்பியுங்கள். இலக்கில்லாத பயணம் வெற்றியளிக்காது.

எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கைக்கு ஒரு வடிவம் இருக்க வேண்டும். அந்த வடிவத்தை நீங்களே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் அவர்களை நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்க அனுமதிப்பது தவறு. நீங்கள் இன்னொருவரைப் பின்பற்றலாம். அல்லது அவரது நல்ல குணங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரைப் போலவே வாழ முயற்சிக்கக் கூடாது. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

உழைக்கும் பணத்தை வாரி இறைக்கக் கூடாது. அதற்காக சேர்த்துக் கொண்டே போகவும் கூடாது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் உங்களுக்கான முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தவறாதீர்கள். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையை வாழ்வதற்குத்தானே தவிர கஷ்டப்படுவதற்கு அல்ல. அதற்காக கையில் இருப்பதையெல்லாம் செலவழித்துவிட்டு நாளைக்கு என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கக் கூடாது.

முதலில் உங்களை சுய பரிசோதனை செய்யுங்கள். நீங்கள் யார் என்பதைக் கண்டறியுங்கள். உங்கள் பிறப்பின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நீண்ட காலத் திட்டமிடலை உருவாக்குங்கள். அந்த நீண்ட கால இலக்கை குறுகிய கால அடைவு மட்டங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இனி என்ன, அந்த அடைவு மட்டங்களை நிர்ணயித்துக் கொண்ட கால அளவுகளில் கடப்பது மட்டும் தான் வேலை. உங்கள் பிறப்பின் நோக்கம் எதுவோ அதிலிருந்து ஒரு போதும் விலகிவிடாதீர்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் இலக்கை அடையும் வரை சோர்ந்துவிடாதீர்கள். நீங்கள் நீங்களாகவே வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்!

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து